மக்களுக்கான, மக்களால் உருவாக்கப்பட்ட வளர்ச்சித் திட்டம்
சட்டமன்ற உறுப்பினர் நிதி (MLA Fund) - ஒதுக்கீடு முன்னுரிமை
30% - கல்வி மற்றும் மருத்துவக் கருவிகள்: அரசு பள்ளிகள் மற்றும் PHC மேம்பாடு. 30% - பொது வசதி: பூங்காக்கள், இடுகாடுகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள். 20% - பாதுகாப்பு: சிசிடிவி மற்றும் உயர் கோபுர மின் விளக்குகள். 20% - நெருக்கடிக் காலப் பணிகள்: மழைநீர் மோட்டார்கள் மற்றும் சிறிய அளவிலானக் கழிவுநீர் வாகனங்கள்.
சட்டமன்ற உறுப்பினர் நிதியில் செய்யப்படும் பணிகளைக் கண்காணிக்க வார்டு வாரியாக 'மக்கள் கண்காணிப்புக் குழுக்கள்' மற்றும் டிஜிட்டல் தகவல் பலகைகள் நிறுவப்படும். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எப்பொழுதும் மக்களுக்காகத் திறந்திருக்கும் என்பதோடு, அனைத்து செலவினங்களையும் மக்கள் தணிக்கை செய்யும் வகையில் வெளிப்படையான நிர்வாகம் பின்பற்றப்படும்.
வரி வசூலிப்பதற்கு முன்னதாகத் தொடர்புடைய பகுதிகளில் சாலை மற்றும் கழிவுநீர் வசதிகள் 100% நிறைவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யும் 'சேவை அடிப்படையில் வரி' (Service-based taxation) கொள்கை மேற்கொள்ளப்படும்.
அதிகாரத்தை ஒரு இடத்தில் குவிக்காமல், ஒவ்வொரு வார்டிலும் 'ஊர் சபைகள்' போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி, மக்கள் முன்னிலையில் திட்டங்கள் தீர்மானிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்படும்.
சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு மேலாண்மை
கொடுங்கையூர் குப்பை மேடு மற்றும் எண்ணூர் தொழிற்சாலைகளுக்கு மிக அருகில் எழில் நகர், வார்டு 38 போன்ற விளிம்புநிலை மக்கள் வசிக்கும் பகுதிகளில் காற்றின் தரம் (AQI) தொடர்ந்து அபாயகரமான அளவிலேயே இருப்பதால், குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி பாதிப்பு மற்றும் பிறவிக் குறைபாடுகள் ஏற்படும் பேராபத்து உள்ளது. ஆகையால், மூன்று இடங்களில் காற்று மாசினை (AQI) அளக்கும் கருவிகள் நிகழ்நேரக் கண்காணிப்பு (real-time monitoring) வசதியுடன் பொருத்தப்படும்.
குடியிருப்புப் பகுதிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையே அடர்த்தியானக் குறுங்காடுகளை உருவாக்கி, நச்சுப்புகையை வடிகட்டும் இயற்கை அரண் ஏற்படுத்தப்படும். தொழிற்சாலைகளின் புகைபோக்கிகளில் (Chimneys) நிகழ்நேர சென்சார்களைப் பொருத்தி, மாசு அளவு மீறப்பட்டால் தானாகவே அபராதம் விதிக்கும் டிஜிட்டல் முறை அமல்படுத்தப்படும்.
கொடுங்கையூரில் தற்போது இருக்கக்கூடிய குப்பைக் கிடங்கினை முழுவதுமாக பயோமைனிங் (Biomining) முறையில் மீட்டுருவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொடுங்கையூர் குப்பை கிடங்கையொட்டி இயங்கக்கூடிய எரிவுலைகள் மற்றும் குப்பைக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் முதலியவை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் கொடிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய “குப்பையில் இருந்து மின்சாரம்” தயாரிக்கும் எரிவுலைகளை நீல வகைப்பாட்டிற்கு மாற்றிய முடிவினை திரும்பப்பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். மேலும், நிரந்தரத் தீர்வாக, வீட்டுக்கு வீடு தரம் பிரிக்கப்பட்ட கழிவு சேகரிப்பு மேலாண்மை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தப்படும். குறிப்பாகக் கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து குப்பைகள் கொட்டப்படும் முறை உடனடியாக நிறுத்தப்படும். பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மையின் வழியில் குப்பை சேகரிப்பு முறைப்படுத்தப்படும். மூன்று முறைக்கு மேல் சுற்றுச்சூழல் விதி மீறலில் ஈடுபடும் தொழிற்சாலைகளின் உரிமம் திரும்பப் பெறப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மாசுக்கட்டுப்பாடு மண்டலம் மற்றும் பசுமைத் திட்டம்
வடசென்னை இராதாகிருஷ்ணன் நகர் பகுதியில், கொடுங்கையூர், CPCL மற்றும் IOCL போன்ற நிறுவனங்கள் சிறப்பு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, 24x7 டிஜிட்டல் கண்காணிப்பு மையங்கள் நிறுவப்படுவதோடு தொகுதியின் சாலை ஓரங்களில் நிழல் தரும் நாட்டு மரங்களை நட்டு, மாசுபாட்டைக் குறைத்து வெப்பம் கட்டுப்படுத்தப்படும்.
பக்கிங்காம் கால்வாய் மீட்பு
பக்கிங்காம் கால்வாயில் வீட்டு பயன்பாட்டுக் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் நேரடியாகக் கலப்பதைத் தடுத்து, கழிவுநீர் கலக்கும் ஒவ்வொரு முனையிலும் சிறிய அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (Micro-STPs) அமைக்கப்படும். கால்வாயின் நீரோட்டத்தைப் பாதிக்காத வகையில், மேற்பரப்பில் மிதக்கும் பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளைத் தடுக்கப் பல்வேறு நிலைகளில் வலைகள் அமைக்கப்படும். அக்குப்பைகள் வகைப்படுத்தப்பட்டு மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பப்படும்.
தூர்வாருதல் என்கிற பெயரில் கரைகளை மட்டும் தூர்வாரும் தற்போதைய முறையைக் கைவிட்டு, கால்வாயின் மையப்பகுதியில் பல ஆண்டுகளாகப் படிந்துள்ள நச்சுப் படிமங்கள் அகற்றப்படும். பக்கிங்காம் கால்வாயின் கரைகளில் வளர்ந்து இருக்கக்கூடிய சீமைக் கருவேல மரங்களை நீக்கிவிட்டு, கால்வாயின் உட்புறக் கரைகளில் நீரைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்ட மூங்கில், பூவரசு, சவுக்கு, வெட்டிவேர் போன்ற தாவரங்கள் வளர்க்கப்படும்.
கடல் அரிப்பு மற்றும் நீர் மேலாண்மை
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் மேலும் ஒரு முக்கிய சிக்கலான கடல் அரிப்பைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதோடு, அனைத்து வகை நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பு இன்மை நிலையில் இருந்து மீட்டெடுக்கப்படும். கடல் மட்டம் உயர்வு மற்றும் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக எடுக்கப்படுவதால், இராதாகிருஷ்ணன் நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் ஆதாரங்கள் முற்றிலும் உப்பு நீராக மாறிவிட்டன. இது கட்டிடங்களின் உறுதித்தன்மையை பலவீனமாக்குகிறது.
மழைநீரினை 'ஊடுருவல் கிணறுகள்' (Injection Wells) வழி நிலத்திற்குள் செலுத்தி, நன்னீர் அழுத்தத்தை (Freshwater Pressure) அதிகரித்து உப்பு நீரை வெளியேற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுக்கவும் நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்கவும் பனை மரங்களை நட்டு 'பனை அரண்' உருவாக்கப்படும்.
கழிவுநீர் மற்றும் தூய்மைப் பணிகள்
இராதாகிருஷ்ணன் நகர் பகுதியின் குறுகிய பாதைகளைக் கருத்தில் கொண்டு, நவீன 'சூப்பர் சக்கர்' (Super Sucker) இயந்திரங்கள் வழிக் கழிவுநீர் அடைப்புகள் கண்டறிந்து சீர் செய்யப்படும். குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் இணையாகச் செல்லும் இடங்களைக் கண்டறிந்து, கசிவுகளை நீக்கிக் குடிநீர் சுத்திகரிப்பு உறுதி செய்யப்படும்.
ஒவ்வொரு நாளும் தரம் பிரித்துக் குப்பை அகற்றம், குப்பைத் தொட்டிகளைப் பராமரிப்பதோடு, 'பேட்டரி வாகனங்கள்' வழி வீடு வீடாகச் சென்று தினம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிப்பது 100% கடைபிடிக்கப்படும். குறுகிய தெருக்களுக்குள் சென்று கழிவுநீரை உறிஞ்சும் வகையில் சிறிய அளவிலான இயந்திர வாகனங்களை (Mini Jetting Machines) வாங்க நிதி ஒதுக்கப்படும்.
காசிமேடு துறைமுகம் மற்றும் மீனவர் நலன்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நெகிழிக் கழிவுகள் மற்றும் டீசல் கசிவு காரணமாக கடல் சூழல் பாதிக்கப்பட்டு மீன்கள் குறையும் அபாயம் உள்ளது. துறைமுகப் பகுதியில் மட்டுமின்றிக் கழிவு மேலாண்மைத் திட்டம் RK நகர் முழுமைக்கும் பரவலாக்கப்பட்டு ஒழுங்கு படுத்தப்படும்.
மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்ய, குளிரூட்டப்பட்ட அரசு விற்பனை நிலையங்கள் மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளைத் தொகுதியிலேயே அமைக்கப்படும். துறைமுகத்தில் 'சோலார் குளிர்சாதனக் கிடங்குகள்' (Solar Cold Storage) நிறுவப்படும்.
சுகாதார மேம்பாடு
ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன மருத்துவக் கருவிகள் மற்றும் போதிய மருத்துவர்களுடன் கூடிய இலவச சிறப்பு மருத்துவமனைகளாக மாற்றப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களை 'ஸ்மார்ட்' மையங்களாக மாற்றி, அங்கு டிஜிட்டல் எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் வசதிகள் ஏற்படுத்தப்படும். தடையின்றி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய 'இ-மருந்தகம்' முறை செயல்படுத்தப்படும்.
இராதாகிருஷ்ணன் நகரின் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் 'நடமாடும் மருத்துவ முகாம்கள்' மூலம் வாரத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு வார்டுக்கும் நேரடியாகச் சென்று அடிப்படைச் சிகிச்சைகள் வழங்கப்படும்.
போக்குவரத்து மற்றும் சாலை வசதிகள்
எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் கொருக்குப்பேட்டை சாலைகளில் உள்ள ரயில்வே கேட்டுகள் சரக்கு ரயில்களுக்காக அடிக்கடி மூடப்படுவதால், ஒரு மணிநேரம் வரை ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தேங்கும் நிலை உள்ளது. ரயில்கள் இப்பகுதிகளில் கடக்கும் நேரங்கள் கணிக்கப்பட்டு அதற்கு ஏற்ப மக்களுக்கு நேர விரயம் இல்லாது போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும்.
மேலும், திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்தப்படும். உட்புறச் சந்துகளை இணைக்க முன்பு நடைமுறையில் இருந்த 'சிற்றுந்து' (Small Bus) வழித்தடங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.
வேலைவாய்ப்பு மற்றும் திறன் மையம்
TNPSC/UPSC தேர்வுகளுக்குத் தயாராக நவீன டிஜிட்டல் நூலகம் மற்றும் 'தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்' (TNSDC) வழி இலவசத் தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்ற சிறு குறு தொழில் தொடங்கத் தேவையான பயிற்சிகள் மற்றும் குறைந்த வட்டியில் கடன் வசதி (Start-up loans) வழங்கப்படும்.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு
TASMAC மதுக்கடைகள் மூடப்படுவதோடு வார்டு வாரியாக அரசு சார்பில் இலவச உளவியல் ஆலோசனை மற்றும் போதை மறுவாழ்வு மையங்கள் (Deaddiction Centers) நிறுவப்படும். பொதுமக்களுக்கு இடர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் மதுக்கடைகள் உடனடியாக மூடிட நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் உள்ள வேலை வாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80% வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.
வணிகர் விற்பனை மற்றும் தற்சார்பு
மார்க்கெட் பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கு எனத் தனி விற்பனை வளாகங்களை (Vending Arcades) உருவாக்கி, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பைத் தடுத்து, சிறு வணிகர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 'தற்சார்பு வணிக மண்டலங்கள்' உருவாக்கப்படும்.
விளையாட்டு மற்றும் ஆக்கப்பூர்வ ஆற்றல்
ஜீவா நகர் மற்றும் செரியன் நகர் மைதானங்களை பன்னாட்டுத் தரத்திற்குப் புனரமைத்து, ஒவ்வொரு வார்டிலும் உள்ள சமூக நலக் கூடங்களில் (Community Halls) நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும். தமிழர்களின் மரபு சார்ந்த விளையாட்டுகளான சிலம்பம், கபடி மற்றும் நவீன விளையாட்டுகளுக்கான பயிற்சி மையங்கள் ஒவ்வொரு வார்டிலும் அமைத்து இளைஞர்களின் ஆற்றல் ஆக்கப்பூர்வமாக மாற்றப்படும்.
வீட்டுப் பட்டா மற்றும் குடியிருப்பு உரிமை
“நிலம் என்பது மக்களின் வாழ்வாதாரம்” எனும் கொள்கையின்படி, தொகுதியில் பல தலைமுறைகளாக வசித்துவரும் ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் வாழும் இடத்திலேயே எவ்வித நிபந்தனையுமின்றி “நிரந்தர வீட்டுப் பட்டா” வழங்க முன்னுரிமை அளிக்கப்படும். பட்டா வழங்கும் பணிகளில் உள்ள ஊழல் தவிர்க்கப்படும்.
குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் மற்றும் அரசு நிலங்களில் வசிப்பவர்களுக்கு, அவர்களின் குடியிருப்பு உரிமையை உறுதி செய்யும் வகையில், பட்டாவுடன் கூடிய மின்சாரம், குடிநீர் முதலிய அனைத்து அடிப்படை வசதிகளையும் தங்குதடையின்றி வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். முக்கியமாக, புதிய வண்ணாரப்பேட்டை அண்ணா நகர் குடிசைப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, இராதாகிருஷ்ணன் நகரில் நிரந்தரக் குடியிருப்பு, தமிழ்நாடு நகர்ப்புற வாரிய மேம்பாட்டு வாரியத்தின் வழி நிறைவேற்றப்படும்.
2018ல் வழங்கப்பட்டப் புதிய குடியிருப்புகளில் கூட 90% வீடுகளில் நீர்க்கசிவு (Seepage) மற்றும் பூஞ்சைக் காளான் பாதிப்புகள் உள்ளன. இது மூச்சுக் கோளாறு நோய்களைத் தூண்டுகிறது. வெப்பக் கதிர்வீச்சு (Thermal Imaging) மூலம் கசிவு உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, நிரந்தர நீர்ப்புகா (Waterproofing) பூச்சு வசதி ஏற்படுத்தப்படும்.
கல்வித் தரம் மற்றும் அங்கன்வாடி
இராதாகிருஷ்ணன் நகரில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் தனியார் பள்ளிகளுக்கு இணையான உள்கட்டமைப்பு மற்றும் சீரான பாடத்திட்டத்துடன் கூடிய வகையில் தரம் உயர்த்தப்படும். அனைத்து அங்கன்வாடிகளும் 'ஸ்மார்ட்' மையங்களாக மாற்றப்படும்.
துப்புறவுப் பணியாளர் நலன்
துப்புறவுப் பணியாளர்களின் கோரிக்கைகளான நிரந்தர அரசுப் பணி, ஊதிய உயர்வு, ஓய்வூதியம், பணி உயர்வு ஆகியன முழுமையாக நிறைவேற்றப்படும். மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளும் கொடிய முறை செயல்பாட்டில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டு அதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம்
'பெண்கள் பாதுகாப்பு' நிதியின் கீழ் (Nirbhaya Fund), இருட்டாக இருக்கும் அனைத்து தெருக்களிலும் சோலார் எல்.இ.டி விளக்குகள் மற்றும் 'பெண்கள் உதவி' (Help Desk) வசதியுடன் கூடிய கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்படும். அனைத்துக் குறுகிய தெருக்களிலும் எல்.இ.டி விளக்குகள் மற்றும் 'இடர்கால பொத்தான்' (Panic Button) வசதியுடன் கூடிய சிசிடிவி கண்காணிப்பு ஏற்படுத்தப்படும்.
குடும்பத் தலைவிகளுக்கு வெறும் 'இலவசங்களை' வழங்காமல், அவர்களின் வாழ்வாதாரம் தற்சார்புடையதாக மாற்றப்படும். உள்ளூர் இயற்கை வளங்களைக் கொண்டு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை (Value-added products) பெண்கள் உற்பத்தி செய்யும் வகையிலும், அவற்றை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து சந்தைப்படுத்தவும் வழிவகை செய்யப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும், பயிற்சிகள் பெறவும் சிறிய 'மகளிர் விற்பனை மையங்கள்' அல்லது கூட்டரங்குகள் கட்டப்படும்.
பொது மக்கள் வசதிகள்
இராதாகிருஷ்ணன் நகர் பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 'ஆர்.ஓ' (Reverse Osmosis) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்படும். தாழ்வாகத் தொங்கும் மின் கம்பிகளை அகற்றி, நிலத்தடி மின் கேபிள்களாக (Underground Cables) மாற்றுவதற்கு மின்சார வாரியத்தின் வழி சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
போதுமான அளவில் நவீன 'இ-கழிப்பறைகளை' (E-Toilets) அமைக்க நிதி ஒதுக்கப்படும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கவும், காற்று மாசு அதிக அளவில் இருக்கக் கூடிய சாலைப் பகுதிகளில் சிறிய பூங்காக்களை (Pocket Parks) உருவாக்கவும் நிதி பயன்படுத்தப்படும்.
சமூக நலத்துறையின் (Social Welfare Dept.) கீழ் புதுவண்ணாரப்பேட்டை பகுதிகளில் 'ஒருங்கிணைந்த முதியோர் காப்பகங்களை' அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGO) பங்களிப்புடன் நடத்தப்படும். மாநகராட்சி வழி ஆதரவற்றோர் தங்குவதற்குத் தேவையான படுக்கை வசதி மற்றும் உணவுடன் கூடிய காப்பகங்கள் உருவாக்கப்படும். ஒவ்வொரு வார்டு அலுவலகத்திலும் வாரத்திற்கு ஒருமுறை 'மக்கள் குறைதீர்க்கும் முகாம்' நடத்தி மனுக்கள் பெறப்படும்.